Saturday, January 21, 2012

எனக்கு ஒரு பெருத்த சந்தேகம்????????



நான் அடிக்கடி பத்திரிகைகளில் படித்தும், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பார்த்தும், கேட்டும் ரொம்பவே யோசித்த வார்த்தை ஒன்று உண்டு. அது,

வரலாறு காணாத பாதுகாப்பு.

அது என்ன வரலாறு காணாத பாதுகாப்பு? அப்படி வரலாறு கண்ட பாதுகாப்பு தான் என்ன? அதுவும் ஆண்டு முழுவதும் வரும் முக்கிய தினங்கள் குறித்த பாதுகாப்பை  நமது ஊடகங்கள் இப்படி தான் வர்ணிக்கின்றன. (எ.கா: வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி இந்திய தலைநகர் தில்லியிலும் வரலாறு காணாத பாதுகாப்பாம்) ஆக ஓர் ஆண்டில் இத்தனை முறையா வரலாறு காணாத பாதுகாப்பு வரும்? அப்படி பார்த்தால் இது ஒரு கின்னஸ் சாதனை ஆகிவிடாதா?ஒரு மிகைப்படுத்தல் என்பதற்காக இப்படி ஒரு பொய் மூட்டையை தேன் தடவியா அவிழ்த்து விடுவது? அதுவும் இந்த ஒரே அர்த்தமற்ற உவமையை நமது தமிழ் செய்தியாளர் உலகம் ஏன் தொடர்ந்து சொல்கிறது? அதை மாற்ற முடியாதா?  அதை இன்னும் அழகாய் சொல்வோமே! (வரலாறு காணாத பாதுகாப்பு என்பதைவிட, அதிஉயர் பாதுகாப்பு என்பது எப்படி?)

Thursday, January 12, 2012

வரலாற்றை திருத்த முயலுகிறாரா ஜெ?



ஜெயலலிதாவின் சமீபத்திய நன்றிக்கடன் செலுத்தும் அறிவிப்பு இது. முல்லை பெரியாறு அணையை தமது குடும்ப சொத்தினைக் செலவிட்டுக் கட்டி, இந்திய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டிய கர்னல் பென்னி குவிக் நினைவாக ஒரு கோடி ரூபாய் செலவில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கபடும். அதன் திறப்பு விழாவுக்கு பென்னியின் பேரன் அழைக்கப்படுவார்.( பாவம் பென்னியின் பேரன் யாரென்று தெரியவில்லை போலு...ம். காரணம் அரசின் அறிவிப்பில் பேரனின் பெயர் இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பாவது அந்த பேரனுக்கு சொல்லப்பட்டதா என்பதும் சந்தேகம் தான்)



சரி இதில் என்ன ஜெ-யின் வரலாற்றுப்பிழை வந்துள்ளது? நன்றி மறப்பது நன்றல்லவே! அதும் தமிழ்நாட்டில் என உங்களுக்கு எண்ணத் தோன்றும். சரி கீழே படியுங்கள். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட பொழுது, அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்து இருந்தனர். வாய்ப்பூட்டு சட்டம் போட்டனர். ஜாலியன்வாலாபாக்கில் ஜெனரல் டயர் உத்தரவில் ஆங்கிலப்படை கண்மூடித்தனமாக சுட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பலி. அத்துடன் இந்தியாவின் அரிய பொக்கிஷங்களை எல்லாம் அவர்கள் களவாடி சென்று இங்கிலாந்தை பணக்கார நாடாக்கினர். மேலும் பாரதத்தாயின் புதல்வர்களை ஆங்கிலேயர்கள் சொல்லெனா துயரத்துக்கு ஆளாக்கி கொடுமைப் படுத்தினர் என்பது தான் பள்ளியில் நான் மனப்பாடம் செய்து படித்த வரலாறு. அதையே தான் இப்பொழுது எனது உடன்பிறப்புகளும் படிக்கின்றனர். ஆக பிரிட்டீஸார் அனைவருமே கொடியவர்கள் என்று தான் நான் படித்த வரலாறு எனக்கு விளம்பியது. வரலாறு இப்படி இருக்க, நம்மை அடிமைப்படுத்தி வைத்து இருந்த ஆங்கிலேயனின் ஒரு சேவகனுக்கு மணிமண்டபமா? அதுவும் வெள்ளையர்களை அடித்து விரட்டிய பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் பிறந்த மண்ணிலா? யோசியுங்கள். எனது இந்த கேள்வி நியாயம் தானா? அல்லது உண்மை வரலாற்றை மறைத்து, இந்தியாவின் அறிவுஜீவிகள் நமக்கு பொய் வரலாற்றை கற்பித்து வந்துள்ளனரா? அப்படியானால் ஆங்கிலேயர்கள் உண்மையில் நல்லவர்களா? யார் இங்கே குற்றவாளி?

Thursday, November 24, 2011

கூடங்குளம்...! இடிந்தகரை...! என்ன செய்தால் தேவலாம்?

                                                                                    
கூடங்குளம் அணுமின் திட்டம்! யாரை நம்பியோ ஏறத்தாழ ரூபாய் 14000ம் கோடியை கடலில் (கடலுக்கு அருகில்) கொட்டியாகி விட்டது. இதோ.. அதோ என்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே மின் உற்பத்தி தொடங்குவது இழுத்துக் கொண்டே செல்கிறது (இதற்கான காரணத்தை போராளி உதயகுமார் தரப்பு தமது 50 கேள்விகளில் ஒன்றாக கேட்டதா என்பது எனக்கு தெரியாது). இதையெல்லாம் அப்பகுதி மக்கள் சட்டை செய்யாமல் தான் இருந்தார்கள். ஆனால் நடுவில் என்ன நடந்தது?மக்கள் ஏன் வீதிக்கு வந்து போராட்டம் தொடங்கினார்கள்? அதுவும் ரொம்ப தாமதமாக.

போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருக்கட்டும். நடுவில் காமெடித்தனம் காட்டும் அமைச்சர் நாராயணசாமி எதாவது ஒருபக்கம் இருந்துவிட்டு போகட்டும். என்மனதில் தோன்றும் ஒரு தீர்வை இங்கே சொல்கிறேன். முதலில் கூடங்குளம் எப்படியும் இயங்கியாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை.

ஆனால் அந்த சிவபெருமானோ அல்லது ஏசு பெருமானோ வந்து சொன்னாலும் பாதுகாப்பு விசயத்தில் நாங்கள் நம்பிக்கை கொள்வது இல்லை என்பதில் உதயகுமார் தரப்பு தெளிவாக இருக்கிறது. ஆக அந்த முயற்சி இங்கு அவசியம் இல்லை. அடுத்தது மீனவர் பிரச்சனைக்கு வருவோம். கூடங்குளம் அணுமுன் திட்டத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என மீனவர்கள் கருதினால், அதற்கு பிரதிபலனாக அந்த பகுதி மீனவர்களுக்கு மட்டும் டீசல் மானியத்தை இன்னும் அதிகரியுங்கள். அவர்கள் கடலில் அதிக தொலைவு சென்று மீன்பிடிக்கட்டும். கட்டுமரம் வைத்திருப்பவர்களுக்கு மாத உதவி தொகை கொடுங்கள்.

அடுத்தது மக்கள் பாதுகாப்பில் என்ன தான் சமாதானம் சொன்னாலும் அதில் நிலவும் சந்தேகத்துக்கு மருந்து இல்லை. ஆக அந்தப் பகுதி மக்களுக்கு, நபர் ஒருவருக்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும்(இதில் இழப்பீடு தனி). அந்தப் பகுதியில் வசிக்கும் எவர் ஒருவரும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் இந்த தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். இந்த காப்பீடானது குழந்தை பிறப்பில் ஊனம் முதல் எத்தகைய உடல் பாதிப்பிற்கும் பொருந்த வேண்டும். அடுத்ததாக கூடங்குளத்தை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு ஆண்டு முழுமைக்கும் இலவச மின்சாரம் (போதுமான வரையரையுடன்) வழங்கப்பட வேண்டும். இதுதவிர அந்தப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை தயவுதாட்சன்யம் இன்றி நிறைவேற்றி தரலாம். ஆனால் இங்கே அரசியலுக்கு இடம் தரக் கூடாது.

எனது ஒரு அறிவுரையாக இந்தப் பிரச்சனையில் அமைச்சர் நாராயணசாமி கருத்து சொல்லாமல் இருந்தால் அனைத்துக்கும் நல்லது. நமது ஊடகங்களும் நியாயமான யோசனைகளை முன் வைக்கலாம்(தினமலரைப் போல் பிக்காளித்தனமாக அல்ல). வேண்டியவர்கள் யோசிக்கட்டும்.

-சின்னப்பையன்

Thursday, November 3, 2011

முதலமைச்சரை வழிநடத்துவது யார்?

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சின்னப்பையனின் மனம் திறந்த மடல்.

வணக்கம் அம்மா. விசயத்துக்கு நேரடியாக வருகிறேன்.

தொடர் தேர்தல் வெற்றிகளின் மூலம் தமிழக மக்களாகிய நாங்கள் உங்களை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருக்கிறோம்.. சொல்லப் போனால் தமிழர்களின் கடைசி புகலிடம் நீங்கள் தான். ஆனால் நீங்களும் அதை தவறாக கையாண்டால் என்ன செய்வது? அல்லது உங்களை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது என்ற இறுமாப்பா?

நீங்கள் எதையெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று நாங்கள் நம்பினோமோ அதை தான் முதலில் செய்ய தொடங்கினீர்கள். கடந்த ஆட்சியில் கருணாநிதி அரசால் 1200 கோடியில் கட்டப்பட்டு அண்ணாசாலையின் அடையாளமாக திகழ்ந்த புதிய தலைமை செயலகத்துக்கு வந்தவுடன் சங்கு ஊதினீர்கள், பொறுத்துக்கொண்டோம். அடுத்ததாக சமச்சீர் கல்வி திட்டத்துக்கு சங்கு ஊத நீங்கள் எடுத்த பெரு முயற்சி , நீதியின் பெயரால் தோற்கடிக்கப்பட்டததே. இந்த வீண் வேலை தேவை தானா?

108 என்ற அவசர ஊர்தி திட்டம் முன்பு போல செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதை முடக்க வேண்டிய அவசியம் என்ன? இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தையும் முடக்கிவிடுவது என நீங்கள் திட்டம் போடுகிறீர்களே! இது என்ன நியாயம்? தமிழக வரலாற்றில் இடம் பிடிக்க கருணாநிதி கொண்டுவந்த திட்டமாக அது விளங்கினாலும் அதை அப்பட்டமாக முறியடிக்க நீங்கள் போடும் நாடகத்தை மக்கள் ரசிக்கவில்லை அம்மா. உங்களின் இந்த விபரீத எண்ணம் நீதிமன்றத்திடம் மீண்டும் ஒரு அவமானத்தை பெற்று தரலாம்.

உங்களுக்கு கருணாநிதியை பலி வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள் உண்டு என்பதை அறிந்தவர் நீங்கள். ஆனால் ஒரு வல்லூறை பலி வாங்க துடிக்கும் உங்களின் எண்ணம், தவறான திசை நோக்கி செல்வதை நீங்கள் உணருகிறீர்களா? உங்களின் இந்த தவறான பாதை அந்த வல்லூறை தியாகி ஆக்கி விடப்போகிறது. அதை முதலில் உணருங்கள்.

இது போன்ற காரியங்களில் உங்களை இயக்குவது யார்? நீங்களே தானா? அல்லது உங்களிடம் இருக்கும் புல்லுருவிகளா? நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் கிடக்கிறது. அதை முதலில் கையில் எடுங்கள். வீணாக சாக்கடையில் காலை விட்டு அதை கழுவ தண்ணீருக்கு ஓட வேண்டாம்.

நீங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்களில் மின்வெட்டை போக்குவதாக சொன்னீர்களே, அது குறித்த உங்கள் பதில் என்ன? விலைவாசியை குறைத்து விடுவதாக வீதிக்கு வீதி பேசீனீர்களே அது வெறும் வார்த்தைகள் தானா? இது பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட நீங்கள் தயாரா?

ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கும் இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத இடமுண்டு. அதை வலுப்படுத்திக் கொள்ள இன்னும் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். வீணாக வரலாற்றின் கருப்பு பக்கங்களை அலங்கரிக்க முயற்சிக்க வேண்டாம். அதை கருணாநிதி பார்த்துக் கொள்வார். உங்களின் அபார சிந்தனை அறிவை நல்ல திசைநோக்கி திருப்புங்கள். மக்களின் விருப்பம் எதுவென்று அறியுங்கள்? அதை நிரப்புங்கள். அது ஒன்றே தமிழகம் தாண்டி இந்திய மக்களின் அசைக்க முடியாத தலைவியாக உங்களை அலங்கரிக்கும்.









-சின்னப்பையன்

Wednesday, June 9, 2010

கண்மூடித்தனமான நீதி...

இருபது ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் நடந்த விஷ வாயு கசிவில் 20000 -க்கும் மேற்பட்டோரைs பலி வாங்கிய சம்பவத்திற்கு சமீபத்தில் இந்திய நீதிமன்றம் ஓன்று அற்புத தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை என்ன தெரியுமா? இரண்டு ஆண்டு சிறை தண்டானையாம். ஆஹா... என்ன ஒரு இந்த! கிட்டத்தட்ட ஒரு மாநகரின் மக்கள் தொகையை அப்படியே போட்டு விழுங்கிய அந்த சம்பவத்திற்கு இது தான் சரியான தீர்ப்பா? நமது தண்டனையை பார்த்து மேற்கத்திய ஊடகங்கள் வாய்விட்டு ஏளனமாக சிரிக்கின்றன. இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என இந்தியாவில் நடக்கும் ஒரு வழக்கை பற்றி அமெரிக்கா கருத்து கூறுகிறது. காரணம், இந்த அகோர படுகொலையை நடத்தி இந்தியா தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முதலாளி ஆண்டர்சன் ஒரு அமெரிக்கர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களோ இந்த தீர்ப்பு வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றுவதாக ஒப்பாரி வைக்கிறார்கள். இருபது ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தீர்ப்பு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது அந்த நீதிபதிக்கே வெளிச்சம். தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படாமல் இருந்தால் சரி. ஏனென்றால் இந்தியாவின் சட்டங்கள் மகத்தானவை.


-சின்னப் பையன்

Friday, April 23, 2010

சனியன் புடிச்ச நாரை...

சனியன் புடிச்ச நாரை கெழுத்திய போட்டு முழுங்குச்சாம். அந்த கதையா மாட்டிகிட்டு முழிக்கும் தத்து பித்து பேச்சுக்காரர் சசி தாரூர் மற்றும் மோடி மஸ்தான் வேலைகளை சிறப்பாக செய்யும் லலித் மோடிக்கும் நமது வாழ்த்துக்கள்.

Saturday, April 3, 2010

சானியா. ஒரு விதியின் விளையாட்டு...

சானியா மிர்ஸா. இந்திய டென்னிஸ் உலகின் கனவு தேவதை. அவர் விளையாடியது டென்னிசில் மட்டுமல்ல, நமது பல இளம் காளைகளின் இதயங்களிலும் தான். அந்த அளவிற்கு அவரின் அழகும், பாவனையும் பலரின் தூக்கத்தை கெடுத்திருகிறது. இறைத்து மைதானத்தில் விளையாடிய சானியாவின் வாழ்க்கையில், விதி விளையாடியதை யாராலும் தடுக்க முடியவில்லை. அதுவும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டிருக்கும் இந்த கனவு மங்கைக்கு குடும்ப வாழ்க்கையாவது இனிக்க வேண்டும். அதேநேரம் 120 கோடி இந்திய தேச மக்களின் முகத்தில் கரியை பூசித் தான் இந்த திருமணத்தை ஜோராக நடத்தி காட்டியிருக்கிறார்கள் சானியாவின் குடும்பத்தினர். இனியும் அவர் இந்திய தேச மங்கையாக தன்னை அடையாளம் காட்ட முயற்சிப்பது என்பது சோனியா காந்தி தன்னை ஒரு இத்தாலி பெண்ணாக காட்டுவதற்கு முயற்சிப்பது போலாகும். ஆக இது தேவை இல்லாத முயற்சி தானே? பேசாமல் சானியா மிர்சா இனி பாகிஸ்தான் நாட்டுக்காக ஆடுவதே சாலச் சிறந்தது. காரணம் அங்கு தான் இது வரை ஒரு பெண் டென்னிஸ் வீராங்கனை கூட உலக அரங்கில் வெளிப் படவில்லை. அந்த குறையை சானியா போக்கட்டும். தனது புகழையும் அந்த பாகிஸ்தானுக்கே சீர்வரிசையாக கொண்டு செல்லட்டும். பாலூட்டி வளர்த்த கிளி பறந்தோடி விட்டது. இனி புதியதொரு இந்திய டென்னிஸ் மங்கை விரைவில் நமக்கு வந்து சேருவாள்.
-சின்னப் பையன்