போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருக்கட்டும். நடுவில் காமெடித்தனம் காட்டும் அமைச்சர் நாராயணசாமி எதாவது ஒருபக்கம் இருந்துவிட்டு போகட்டும். என்மனதில் தோன்றும் ஒரு தீர்வை இங்கே சொல்கிறேன். முதலில் கூடங்குளம் எப்படியும் இயங்கியாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை.
ஆனால் அந்த சிவபெருமானோ அல்லது ஏசு பெருமானோ வந்து சொன்னாலும் பாதுகாப்பு விசயத்தில் நாங்கள் நம்பிக்கை கொள்வது இல்லை என்பதில் உதயகுமார் தரப்பு தெளிவாக இருக்கிறது. ஆக அந்த முயற்சி இங்கு அவசியம் இல்லை. அடுத்தது மீனவர் பிரச்சனைக்கு வருவோம். கூடங்குளம் அணுமுன் திட்டத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என மீனவர்கள் கருதினால், அதற்கு பிரதிபலனாக அந்த பகுதி மீனவர்களுக்கு மட்டும் டீசல் மானியத்தை இன்னும் அதிகரியுங்கள். அவர்கள் கடலில் அதிக தொலைவு சென்று மீன்பிடிக்கட்டும். கட்டுமரம் வைத்திருப்பவர்களுக்கு மாத உதவி தொகை கொடுங்கள்.
அடுத்தது மக்கள் பாதுகாப்பில் என்ன தான் சமாதானம் சொன்னாலும் அதில் நிலவும் சந்தேகத்துக்கு மருந்து இல்லை. ஆக அந்தப் பகுதி மக்களுக்கு, நபர் ஒருவருக்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும்(இதில் இழப்பீடு தனி). அந்தப் பகுதியில் வசிக்கும் எவர் ஒருவரும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் இந்த தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். இந்த காப்பீடானது குழந்தை பிறப்பில் ஊனம் முதல் எத்தகைய உடல் பாதிப்பிற்கும் பொருந்த வேண்டும். அடுத்ததாக கூடங்குளத்தை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு ஆண்டு முழுமைக்கும் இலவச மின்சாரம் (போதுமான வரையரையுடன்) வழங்கப்பட வேண்டும். இதுதவிர அந்தப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை தயவுதாட்சன்யம் இன்றி நிறைவேற்றி தரலாம். ஆனால் இங்கே அரசியலுக்கு இடம் தரக் கூடாது.
எனது ஒரு அறிவுரையாக இந்தப் பிரச்சனையில் அமைச்சர் நாராயணசாமி கருத்து சொல்லாமல் இருந்தால் அனைத்துக்கும் நல்லது. நமது ஊடகங்களும் நியாயமான யோசனைகளை முன் வைக்கலாம்(தினமலரைப் போல் பிக்காளித்தனமாக அல்ல). வேண்டியவர்கள் யோசிக்கட்டும்.
No comments:
Post a Comment